உறவுகளின் சிக்கல்களில் அல்லாடித் தத்தளித்து, காமத்தை வென்றெடுக்க . இயலாமல் அலையில் சுழலும் சருகாகி, தனக்கானதைக் கண்டடைகிற மனிதர்களின் சுயம், பரந்த மணல்வெளியின் சின்னஞ்சிறு துகள்களைப்போல் இக்கதைகளில் நிறைந்து கிடக்கிறது. ப்ரகாஷ் சிறந்த கதைசொல்லி. நேரடியாகப் பேசும் தன்மை கொண்டவை அவரது கதைகள். ப்ரகாஷ் கதைகளைப் பற்றிச் சொல்வதைவிட அதை வாசித்து உணரச் செய்வதே இத்தொகுப்பின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ப்ரகாஷ் கதைகளில் மனித மனங்களின் அக, புற உலக சித்தரிப்புகள், சிக்கல்கள் சார்ந்த பதிவுகள் மட்டுமின்றி அவர் வாழ்ந்த காலத்தின் மக்கள் குறித்த வாழ்க்கைப் பதிவும், புலம் சார்ந்த குறிப்புகளும் விவரிக்கப்படுகின்றன.