அரசர்கள் என்று சொன்னவுடனேயே, அவர்கள் எப்பொழுதும் ஒரு வட்டத்தினுள் வாழும் மனிதர்களாகவே நினைத்துக் கொண்டிருக்கிறோம். மாட மாளிகையிலும், எப்பொழுதுமே ராஜ காரியங்களிலும் வாழும் மனிதர்கள் ஆகவே அவர்களை நமக்கு காட்டி இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கும் அல்லவா! அவர்களுக்கும் நண்பர்கள், உயிர் தோழர்கள், தந்தை ஸ்தானத்தில் வியந்து பார்க்க கூடிய மனிதர்கள், பொதுஜனகளோடு இருக்கும் ஆசாபாசங்கள், சக மனிதனுக்காக அழ கூடிய மனிதம் இது அனைத்தும் நம்மை போலவே அவர்களுக்கும் இருக்கும் என்று நான் ஆணித்தரமாக நம்புகிறேன். ஏதோ ஒரு அரசனுக்கு இதைப்போல் நடந்தது என்று கூறுவதைவிட, உங்களை நேராக ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்திற்கு அழைத்துச் சென்று அங்கே அவருக்கு இருக்கும் நண்பர்கள், உயிர் தோழர்கள், தந்தை ஸ்தானத்தில் வியந்து பார்க்க கூடிய மனிதர்கள், பொதுஜனகளோடு இருக்கும் ஆசாபாசங்கள், சக மனிதனுக்காக அழ கூடிய மனிதம் என்று அனைத்தையும் இந்தப் புத்தகத்தின் வாயிலாக உங்களுக்கு காட்ட விருப்பப்படுகிறேன்.